ஔவைக்கு அருள் செய்த விநாயகர்
கயிலாயம் செல்வதற்காக விரைந்து பூஜை செய்த ஔவையாரிடம் வழக்கம்போல் நிதானமாக பூஜை செய்யும்படி விநாயகர் கூறினார்.;
ஔவையார் தினமும் விநாயகரை வழிபாடு செய்பவர். ஒருநாள் விநாயகரை அவசரம் அவசரமாக வழிபட்டார். அப்போது விநாயகப்பெருமான் “ஏன் விரைந்து பூஜை செய்கின்றாய்?” என்று கேட்க, ஔவையோ, “சுந்தரரும், சேரமானும் கயிலை செல்கிறார்கள். நானும் கயிலை செல்ல விழைகின்றேன்” என்றார். அதற்கு விநாயகர், "பொறுமையுடன் பூஜை செய். அவர்கள் கயிலை செல்லும்முன் உன்னை சேர்த்து அருள்வோம்" என்றார்.
பின்பு அவ்வையார், நிதானமாக பூஜை செய்தார். பூஜை நிறைவுற்றதும் ஔவையை தன்னுடைய துதிக்கையால் தூக்கி, கயிலையில் கொண்டு போய் சேர்த்தார், விநாயகர். அதன்பின்னரே, யானையில் சென்ற சுந்தரரும், குதிரையில் சென்ற சேரமானும் வந்து சேர்ந்தனர்.
ஔவையார் தங்களுக்கு முன்பு வந்திருப்பதை அறிந்து இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அவரிடம் தங்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தது எவ்வாறு என்று கேட்டனர். அவர்களது வியப்பை கண்ட ஔவையார், விநாயகப் பெருமான் தனக்கு அருள்புரிந்த விதத்தை எடுத்துரைத்தார்.