சபரிமலையில் தோன்றிய மகர ஜோதி...சரண கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
தீபாராதனையின்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் 3 முறை மகர ஜோதியாக அய்யப்பன் காட்சி அளித்தார்.;
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 27-ம் தேதி வரை நடந்தது.அதை தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கான பூஜைகள் நடத்தப்பட்டு ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது. பின்பு பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
இந்தநிலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் இன்று மதியம் பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து மாலையில் சன்னிதானத்திற்கு திருவாபரணங்கள் கொண்டு செல்லப்பட்டன. அதனை கோவில் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு, சபரி மலை மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்பு அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவித்து அரசனாக, பந்தள ராஜகுமாரனாக ஜொலிக்கும் அய்யப்பனுக்கு தீபாராதனை நடைபெற்றது. அய்யப்பனின் திருமுகம், தங்க கிரீடம், உடல் பாகங்கள், தங்கத்தின் செய்த 2 வாள்கள், 2 யானைகள், 2 லட்சுமி பதக்கங்கள், தங்க ஒட்டியாணம், தங்க சங்கு, முத்துமணி மாலைகள் ஆபரணபெட்டியில் உள்ளன.
மாலை 6.45 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் மூன்று முறை மகர நட்சத்திரமாகவும் ஜோதி வடிவிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்பொழுது சாமியே சரணம் அய்யப்பா..சாமியே சரணம் அய்யப்பா... என பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் சன்னிதானம் மட்டுமின்றி சபரிமலை எங்கும் எதிரொலித்தது. சபரிமலை முழுவதும் சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் விண்ணை பிளந்தது.