கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவிலில் நடராஜர் வாகன பவனி

நடராஜ பெருமானுக்கு விசேஷ பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.;

Update:2025-12-07 11:44 IST

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்றில் அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இது அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த தலமாகும். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திரத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி நடராஜருக்கு பால், தயிர், மஞ்சள்பொடி, மாபொடி , இளநீர், பன்னீர், சந்தனம், களபம், விபூதி, தேன் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள மூலஸ்தானம் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் சாயராட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் நடராஜ பெருமானுக்கு விசேஷ பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் நடராஜ பெருமான் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது வெளிப்பிரகாரத்தில் உள்ள 4 மாடங்களிலும் தேவாரப் பாடல் பாடப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவில் திருவாதிரை வழிபாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்