சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.;

Update:2026-01-16 09:46 IST

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் ஆண்டுதோறும் வைகாசி ஆவணி, தை ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கொடி ஏற்றுதல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குரு பால்பையன் தலைமை தாங்கினார். குருமார்கள் பையன் காமராஜ், பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குரு பையன்ராஜா கொடியேற்றி வைத்தார். மதியம் 12 மணிக்கு அன்னதர்மமும், மாலையில் பணிவிடையும், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழா வருகிற 26-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 17-ந் தேதி மாலையில் அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 18-ந் தேதி இரவு அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதலும், 19-ந் தேதி மாலையில் அய்யா பூஞ்சப்பரத்தில் பவனி நடக்கிறது. 20-ந் தேதி அய்யா பச்சைசாற்றி சப்பர வாகனத்திலும், 21-ந் தேதி அய்யா சர்ப்ப வாகனத்திலும், 22-ந் கருட வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

8-ம் நாள் விழாவான 23-ந் தேதி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி சாமிதோப்பு, முத்திரி கிணறு சமீபம் கலி வேட்டையாடுதல் நிகழ்வு நடக்கிறது. அதன் பிறகு அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான் கோவில்விளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சாமிதோப்பு வந்தடைகிறார்.

24-ந் தேதி அய்யா அனுமார் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 25-ந் தேதி இரவு 12 மணிக்கு அய்யா இந்திர விமானம் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவில் 11-ம் நாளான 26-ந் தேதி பகல் 12 மணிக்கு அய்யா பல்லாக்கில் பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமைபதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்