ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரி

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரியின்போது திரளான பக்தர்கள் புனித நீராடினர்.;

Update:2025-12-14 16:25 IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீ வாஞ்சியத்தில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் திருக்கோவில் உள்ளது. ஆயுள் விருத்தி தலமாக கருதப்படும் இந்த ஆலயத்தில் எமதர்மருக்கும் சித்திர குப்பதருக்கும் தனி சன்னதி உள்ளது. இது இந்த கோவிலின் தனி சிறப்பு ஆகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருட கார்த்திகை மாத திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் புஷ்ப பல்லக்கு, காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.

இந்நிலையில் இன்று கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தேவசேனையுடன் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவிலில் உள்ள புண்ணிய தீர்த்தமான குப்த கங்கைக்கு வந்து, குளக்கரையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிவபெருமான் கையில் உள்ள சூலத்தின் அம்சமாக இருக்கும் அஸ்திர தேவருக்கு பால், மஞ்சள், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அஸ்திரதேவருக்கு குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. சூலத்துடன் அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி எழுந்து புனித நீராடினர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர்.

Tags:    

மேலும் செய்திகள்