திருவேடகம் சோனை சாமி, அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சோனை சாமி, அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவேடகம் கணேச குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சனிக்கிழமை காலை மங்கல இசை, விநாயகர் பூஜையுடன் முதலாம் கால யாக பூஜையை தொடங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜையுடன் நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்றது. இதைத்தொடர்ந்து கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்வின்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பால், தயிர், வெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் திருவேடகம், சோழவந்தான், குருவித்துறை, மன்னாடிமங்கலம் ,மேலக்கால், தேனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.