3 நாட்கள் தொடர் விடுமுறை... ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.;
பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். சாதாரண நாட்களை விட அமாவாசை தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்து, பின்னர் ராமநாத சுவாமியை வழிபடுகிறார்கள். இதேபோல் விடுமுறை தினங்களிலும் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
அவ்வகையில் சனி, ஞாயிறு, திங்கள் (குடியரசு தின விழா) என 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முதல் ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். இவ்வாறு நீராடிய பக்தர்கள், வடக்கு கோபுர வாசலில் இருந்து கிழக்கு கோபுர வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடினார்கள்.
பின்னர் சுவாமியை தரிசனம் செய்வதற்கும் நீண்ட நேரம் காத்திருந்தனர். முதல் பிரகாரத்தில் இருந்து 2-ம் பிரகாரம், 3-ம் பிரகாரம் கிழக்கு வாசல் வரையிலும், 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் சிறப்பு கட்டண தரிசன பாதையிலும், இலவச தரிசன பாதையிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்
அக்னி தீர்த்த கடற்கரை, கோவிலில் ரதவீதி சாலைகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிகமாக காணப்பட்டனர். பக்தர்கள் அதிகளவில் குவிந்திருந்ததால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.