நாடு முழுவதும் 233 மையங்களில் திருப்பாவை சொற்பொழிவுகள்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-12-09 14:02 IST

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புனித தனுர் மாதத்தை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி முதல் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை ஒரு மாதம் இந்தியா முழுவதும் 233 மையங்களில் புகழ்பெற்ற அறிஞர்களால் திருப்பாவை சொற்பொழிவுகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகள் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 76 மையங்கள், தெலுங்கானாவில் 57 மையங்கள், தமிழகத்தில் 73 மையங்கள், கர்நாடகத்தில் 21 மையங்கள், புதுச்சேரி மாநிலத்தில் 4 மையங்கள், புதுடெல்லியில் 1 மையம், ஒடிசா மாநிலத்தில் 1 மையம் என மொத்தம் 233 மைங்களில் திருப்பாவை சொற்பொழிவுகள் நடத்தப்படுகிறது.

தனுர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் சுப்ர பாதத்துக்குப் பதிலாக திருப்பாவை பாராயணம் செய்யப்படும். திருப்பதியில் அன்னமாச்சாரியார் கலையரங்கம் மற்றும் கபிலத்தீர்த்தம் சாலையில் உள்ள வரதராஜசுவாமி கோவிலில் திருப்பாவை சொற்பொழிவுகள், பாராயணங்கள் நடத்தப்படும்.

12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் இந்தத் தனுர் மாத விரதத்தை நிகழ்த்தும் முறையை விளக்கும் 30 பாசுரங்களின் தொகுப்பான திருப்பாவையை இயற்றினார். திருப்பாவையின் சாராம்சம் முழு முதற்கடவுளுக்கு சேவை (கைங்கர்யம்) செய்வதாகும்.

தனித்தனியாக அல்லாமல் கூட்டாக விரதம் செய்யும்போது அதிக பலன் கிடைக்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த மரபின்படி இந்தப் புனித மாதத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் திருப்பாவை சாத்துமுறை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்