என்ஜினீயரின் மனைவி கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல்

சிவமொக்காவில் என்ஜினீயரின் மனைவி கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-30 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்காவில் என்ஜினீயரின் மனைவி கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தெரிவித்துள்ளார்.

என்ஜினீயர் மனைவி

சிவமொக்கா டவுன் விஜயநகரை அடுத்த குத்தியப்பா காலனியை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன். இவரது மனைவி கமலம்மா (வயது 54). மல்லிகார்ஜூன் சிவமொக்கா பொதுப்பணித்துறையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் டாக்டர் படிப்பு படித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி மல்லிகார்ஜூன், கோவாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். இந்தநிலையில், வீட்டில் கமலம்மா மட்டும் தனியாக இருந்தார்.

இரவு வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கமலம்மாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து வீட்டில் இருந்த ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த துங்கா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கமலம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துங்கா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மர்மநபர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 4 பேர் கொண்ட மர்மகும்பல் கமலம்மாவை கொலை செய்துவிட்டு காரில் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

6 பேர் கைது

இந்தநிலையில் கமலம்மாவை கொைல செய்த வழக்கில் நேற்றுமுன்தினம் அனுமந்தா நாயக் (வயது22), பிரதீப் (21), அப்பு நாயக் (21) பிரபு நாயக் (26), சதீஷ் (26) ராஜூ (24) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் அனுமந்த நாயக் மல்லிகா வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து உள்ளார். அவர் தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கமலம்மாவை கொன்று பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து துங்கா நகர் போலீசார் கைதனாவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் ரொக்கம், கார், 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்