உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: கர்ப்பிணி தற்கொலை வழக்கில் 11 பேருக்கு வலைவீச்சு
சிந்துவின் உடலை சரத்தின் வீட்டின் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சங்கரி கொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து பரவன்னவர்(வயது 25). இவரும், ராணிபென்னூர் தாலுகா குடாரிஹெல் கிராமத்தைச் சேர்ந்த சரத் நீலப்பா என்ற வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் திருமண ஆசை வார்த்தை கூறி சிந்துவுடன், சரத் நீலப்பா உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் சிந்து கர்ப்பமானார். இதையடுத்து சிந்துவை திருமணம் செய்ய சரத் நீலப்பா மறுத்துள்ளார். இதையடுத்து சரத் நீலப்பாவின் தங்கையும், தனது கல்லூரி தோழியுமான காவியாவிடம் நடந்த விவரத்தை சிந்து கூறினார்.
ஆனால் காவியாவும் சிந்துவை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிந்து கடந்த 7-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்று கூறி சிந்துவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிந்துவின் உடலை சரத்தின் வீட்டின் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பைதகி போலீசில் சிந்துவின் அண்ணன் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் சிந்துவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் சரத் நீலப்பா, அவருடைய தந்தை சுரேஷ், தாய் புட்டவா, தங்கை காவியா, உறவினர்கள் சச்சின், சந்திரப்பா, ரோஹன், ராஜப்பா, ரவி நாகப்பா, ஹாலப்பா மைலப்பா மற்றும் சரத்தின் நண்பர் சங்கரகவுடா கதுரா ஆகிய 11 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த 11 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 11 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.