சிறுமியை கடத்திச்சென்ற இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மும்பை,
கர்நாடக மாநிலம் கனகும்பி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கேவாவின் குட்சிரிம் பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அவர் குட்சிரிம் பகுதியில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வந்தார்.
இதனிடையே, அந்த பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞருக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெற்றோரை சந்திக்க கர்நாடகா செல்வதாக கடந்த புதன்கிழமை அத்தையிடம் கூறிய சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன்பின்னர், சிறுமி அந்த இளைஞரை சந்தித்துள்ளார். பின்னர், சிறுமியை இளைஞர் மராட்டிய மாநிலம் கன்கவல்லி பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார்.
அதேவேளை, கோவாவில் அத்தை வீட்டில் இருந்து கர்நாடகா செல்வதாக கூறிய சிறுமி பெற்றோர் வீட்டிற்கு செல்லாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிறுமியை இளைஞர் கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கடத்தப்பட்ட சிறுமியை மராட்டியத்தின் கன்கவல்லியில் போலீசார் மீட்டனர். மேலும், சிறுமியை கடத்தி சென்ற இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.