இண்டிகோ விமான சேவை பாதிப்பு: இன்றும் 450 விமானங்கள் ரத்து
விமானங்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.;
டெல்லி,
விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை புதிய விதிகளை வகுத்தது. புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து துறை வகுத்த புதிய விதிகளை இண்டிகோ அமல்படுத்தவில்லை.
குறிப்பாக, குறைவான விமானிகள், பணியாளர்களுடன் சேவையை தொடர்ந்தது. இதனால், கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. போதிய விமானிகள் இல்லாத காரணத்தால் இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவை பல ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று ஒரேநாளில் 450 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு என பல்வேறு நகரங்களுக்கான இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அதேவேளை, இண்டிகோ விமான சேவை இன்னும் ஓரிரு நாட்களில் இயல்புநிலைக்கு திரும்பும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.