95 சதவீதம் விமான சேவை மீட்டெடுப்பு - இண்டிகோ அறிவிப்பு

இண்டிகோ விமான சேவை தொடர்ந்து படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.;

Update:2025-12-07 15:11 IST

புதுடெல்லி,

விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை.

இதனால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களாக இது தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி, பன்னாட்டு விமானங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பயணத்தடை ஏற்பட்டு அவதிப்பட்டனர். இது தொடர்பாக விமான நிலையத்தில் இண்டிகோ பணியாளர்களுடன் பயணிகள் சண்டையிடும் சம்பவங்கள் நடைபெற்றது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. இந்தநிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. விமானங்கள் ரத்து படிப்படியாக சரியாகும் என தெரிவித்தது. அதுவரை பணியாளர் பணிநேர கட்டுப்பாடு விலக்கி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், இண்டிகோ சேவை தொடர்ந்து படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமையில் 113 இடங்களுக்கு 700 விமானங்களை இயக்கிய நிலையில், இன்று மாலைக்குள் 1,500-க்கும் அதிகமான சேவை உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

138 இடங்களில் 135 இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், 95 சதவிகித விமான சேவை இணைப்பு மீட்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இண்டிகோ விமானங்கள் ரத்து காரணமாக கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தது. இதனையடுத்து கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்து அதிகபட்சம் ரூ.18 ஆயிரம் வரை வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்