ரெயில் சேவை குறித்து தவறான வீடியோக்களை பகிர்ந்தால் நடவடிக்கை - இந்திய ரெயில்வே எச்சரிக்கை
உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் வீடியோக்களை பகிரக்கூடாது என இந்திய ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.;
புதுடெல்லி,
ரெயில் சேவை குறித்து தவறான தகவல்கள், வீடியோக்களை பகிரும் சமூக ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, ரெயில் சேவை தொடர்பான பழைய அல்லது தவறான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் சமூக வலைதங்களில் சிலர் ரெயில் சேவை குறித்து தவறான வீடியோக்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட 20 சமூக ஊடக கணக்குகள் அடையாளம் காணப்பட்டு வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
சமூக விரோத செயல்களை கண்காணிக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் சமூக ஊடக கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மற்றும் பிற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் பகிரக்கூடாது என சமூக வலைதள பயனர்களிடம் இந்திய ரெயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.