பீகார் தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் குழு இன்று ஆலோசனை
பீகாரில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.;
புதுடெல்லி,
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு பீகார் மாநில ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பெரிதும் கைகொடுத்தது. இதனால் தேர்தலுக்கு பிறகு பீகார் மாநிலத்துக்கு பல்வேறு திட்டங்கள் கொடுக்கப்பட்டன. இந்த திட்டங்கள் எல்லாம் பீகார் சட்டசபை தேர்தலை கருத்தில்கொண்டே மத்திய அரசு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
பீகார் மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனை எதிர்க்கட்சிகள் பெரிய விஷயமாக்கி போராட்டங்கள் நடத்தின. நாடாளுமன்றத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பீகார் மாநில சட்டசபைக்கான தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந் தேதியும், 2-ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு 11-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 14-ம் தேதி நடக்கிறது.
இந்த நிலையில், பீகாரில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு டெல்லியில் இன்று கூடுகிறது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வாக்காளர் திருத்த பட்டியல், தேர்தல் பணி, கள நிலவரம், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.