ஏ.ஐ. மூலம் சக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த கல்லூரி மாணவர் கைது

மாணவிகளின் புகைப்படங்களை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரஹீம் அத்னன் ஆபாசமாக சித்தரித்துள்ளார்.;

Update:2025-10-10 05:31 IST

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் நயா ராய்ப்பூரில் உள்ள சர்வதேச ஐ.ஐ.டி.(IIIT) கல்லூரியில் பிலாஸ்பூரைச் சேர்ந்த ரஹீம் அத்னன்(வயது 20) என்ற மாணவர், பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது அவரது வகுப்பில் படிக்கும் சக மாணவிகள் பலர் கடந்த 6-ந்தேதி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரில், தங்கள் புகைப்படங்களை ரஹீம் அத்னன் ஆபாசமாக சித்தரித்து வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது ரஹீமின் ஹாஸ்டல் அறையில் சோதனை செய்யப்பட்டது. அங்கு அவரது மொபைல் போன், லேப்டாப் மற்றும் பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தபோது, அதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன. கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளின் புகைப்படங்களை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரஹீம் அத்னன் ஆபாசமாக சித்தரித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் விரைந்து வந்து மாணவர் ரஹீமை கைது செய்தனர். மேலும், கல்லூரி நிர்வாகம் சார்பில் இந்த வழக்கை கவனிக்க 3 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மாணவர் ரஹீம் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்து வரும் போலீசார், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை மாணவர் ரஹீம் யாரிடமும் பகிர்ந்துள்ளாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்