மெகந்தி நிகழ்ச்சியில் தகராறு: வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 30 சிறுவர்கள்
திருமணத்துக்கு மெகந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்காவில் உள்ள முனீஸ்வரா லே-அவுட்டில் வசித்து வருபவர் சீனிவாஸ். இவரது மனைவி பிரமிளா. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர்களது பக்கத்து வீட்டில் கேரளாவைச் சேர்ந்த மோகன் மற்றும் ரஷித் ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
அவர்களது வீட்டில் நேற்று முன்தினம் திருமணத்துக்கு மெகந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கேரளாவில் இருந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். இதையடுத்து மோகனின் வீட்டிற்கு வந்திருந்த உறவினர் ஒருவரை சீனிவாசின் மகன் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மோகன் குடும்பத்தினருக்கும், பிரமிளாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
பின்னர் மோகன் தங்கும் விடுதியில் வசிக்கும் தனக்கு தெரிந்த சிறுவர்களை தூண்டிவிட்டு பிரமிளா மற்றும் அவரது மகனை தாக்க கூறியுள்ளார். இதன்படி தங்கும் விடுதியில் இருந்து 30 சிறுவர்கள் வந்து பிரமிளாவின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து தாக்கினர்.
இந்த நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த சீனிவாசையும் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து பிரமிளா எலகங்கா போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.