கோவா இரவு விடுதியின் உரிமையாளர்கள் வெளிநாடு தப்பி ஓட்டம்: இண்டர்போல் உதவியை நாடும் காவல்துறை
கோவா இரவு விடுதியில் நடந்த தீவிபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலியானார்கள்.;
கோவா,
கோவா மாநிலத்தின் வடபகுதியில் அர்போரா கிராமத்தில் ‘ரோமியோ லேன்’ என்ற இரவு விடுதி உள்ளது. தலைநகர் பனாஜியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததால் தீப்பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர். அதற்குள் தீவிபத்தில் 25 பேர் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சமையல் கூட ஊழியர்கள் ஆவர். 3 பெண்களும் பலியானார்கள்.
அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கோவா முதல்-மந்திரி பிரமோத் சவந்த் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பலியானவர்களில் 3 அல்லது 4 பேர் சுற்றுலா பயணிகள் ஆவர். பலியானோரில் 3 பேர் மட்டும் தீக்காயத்தால் இறந்துள்ளனர். மற்றவர்கள் மூச்சுத்திணறி இறந்துள்ளனர். சுற்றுலா பருவம் உச்சத்தில் இருக்கும்போது இத்தகைய விபத்து நடந்தது துரதிருஷ்டவசமானது. முதல்கட்ட தகவலின்படி, தீதடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை இரவு விடுதி நிர்வாகம் பின்பற்றவில்லை என்று தெரிய வந்துள்ளது. விடுதி நிர்வாகம் மீதும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள அந்த விடுதியின் உரிமையாளர்களான கவுரவ் மற்றும் சவுரப் லுத்ரா இருவரும் வீட்டில் இல்லை. இதனையடுத்து இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அதில் குறிப்பிடப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு விமானம் அல்லது துறைமுகங்கள் மூலம் செல்ல முடியாது. விபத்து நடந்த மறுநாள் அதாவது நேற்று அதிகாலை 5:30 மணிக்கு தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் மூலம் உரிமையாளர்கள் தப்பிச் சென்றதை மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்தியாவில் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டு இருந்தாலும், வெளிநாடுகளுக்கான சேவை பாதிக்கப்படாதது அவர்கள் வெளிநாடுகளுக்கு ஓட வாய்ப்பு கிடைத்தது. போலீஸ் விசாரணையில் இருந்து தப்பவே அவர்கள் தப்பி ஓடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாட சிபிஐ அதிகாரிகளின் உதவியை கோவா போலீசார் நாடியுள்ளனர்.