சத்தீஷ்கார் என்கவுன்டர்: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் 2 பேர் வீர மரணம்

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது
சத்தீஷ்கார் என்கவுன்டர்: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் 2 பேர் வீர மரணம்
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர். சரணடையும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசுகள் மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் தண்டிவாடா-பிஜிபுரா மாவட்ட எல்லையிலுள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அதேவேளை, இந்த மோதலின்போது நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com