புதிய காரில் ஏற்பட்ட பழுது; சாலையோரம் நின்ற நடன கலைஞர் லாரி மோதி உயிரிழப்பு
நடன கலைஞர் சுதீந்திராவிடம் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் நடன பயிற்சி பெற்று வந்தனர்.;
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகாவில் தியாம கொண்டலு பகுதியை சேர்ந்தவர் சுதீந்திரா (வயது 36). நடன கலைஞரான இவர் கன்னடத்தில் சாய் நடன நிகழ்ச்சி உட்பட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
மேலும் இவர் தாபஸ்பேட்டையில் நடன பயிற்சி மையமும் நடத்தி வந்தார். இவரிடம் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் நடன பயிற்சி பெற்று வந்தனர். சுதீந்திரா அலங்காரம் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனமும் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் சுதீந்திரா நேற்று முன்தினம் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். நேற்று காலை அவர் அந்த காரில் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பொம்மனஹள்ளி அருகே திடீரென்று கார் பழுதானது. இதையடுத்து காரை அவர் சாலையோரம் நிறுத்திவிட்டு அந்த பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அந்த சமயத்தில் அதே சாலையில் வேகமாக வந்த லாரி சுதீந்திரா மற்றும் அவரது கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் சுதீந்திரா சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்தார்.
இதுகுறித்து தாபஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சுதீந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். புதிய கார் வாங்கிய மறுநாளே விபத்தில் நடன கலைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.