பீகார் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் முடிந்தது - இனி அனல் பறக்க போகிறது பிரசாரம்
பீகாரில் வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.;
பாட்னா,
243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ந்தேதியும், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு 11-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடந்தது. வேட்புமனு திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் நேற்று ஆகும்.
இதைப்போல 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி முதல் நேற்று வரை நடந்தது. இந்த மனுக்கள் பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் மனுக்கள் திரும்ப்பெற 23-ந்தேதி கடைசி நாள் ஆகும். மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி (இந்தியா கூட்டணி) நேருக்கு நேர் களத்தில் உள்ளன.
மறுபுறம் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் பீகார் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறது. அதேநேரம் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடவில்லை.மாநிலத்தில் முதல்கட்ட தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான நாள் மற்றும் 2-வது கட்ட தேர்தலில் வேட்பு மனுதாக்கல் நேற்று முடிந்தது.
இதற்கிடையில், மாநிலத்தில் தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி இருந்தனர். வேட்பு மனுதாக்கல் முடிந்ததால் இனி தேர்தல் பிரசாரம் அனல் பறக்கப்போகிறது. தேர்தல் கள பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பிரதமர் மோடி வருகிற 24-ந்தேதி பீகாரில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதைப்போல மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் முதல்-மந்திரிகள் ஆகியோரும் விரைவில் பீகார் தேர்தல் பிரசார களத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பீகார் தேர்தல் களத்தை தலைவர்கள் முற்றுகையிட உள்ளனர்.