வங்காளதேச வன்முறை: மதச்சார்பின்மை ஆதரவாளர்களிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை - யோகி ஆதித்யநாத்

நமது புனித சமூகம் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றிணைக்க பாடுபடுகிறது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்;

Update:2026-01-10 16:41 IST

லக்னோ,

வங்காளதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி கடந்த மாதம் 12ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஷெரீப் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக வங்காளதேசத்தில் இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்தினருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, அந்நாட்டில் இந்து மதத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற ராமசந்திர மகாராஜாவின் 726வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது,

மதச்சார்பின்மை ஆதரவாளர்களாக கூறிக்கொள்பவர்களிடமிருந்து வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. யாரோ அவர்கள் வாயை பசை போட்டு ஒட்டிவிட்டனர் போல தோன்றுகிறது. வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக மதச்சார்பின்மை ஆதரவாளர்களாக கூறிக்கொள்பவர்கள் ஒரு மெழுகுவர்த்தி பேரணி கூட செல்லவில்லை. இவையெல்லாம் நமக்கு ஒரு எச்சரிக்கை. நமது புனித சமூகம் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றிணைக்க பாடுபடுகிறது’ என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்