‘ஜனநாயகன்’ பட பேனர் விழுந்து முதியவர் காயம்: விஜய் ரசிகர் மன்ற தலைவர் உள்பட 3 பேர் கைது

‘ஜனநாயகன்’ படத்தின் டிஜிட்டல் பேனர் விழுந்ததில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் படுகாயமடைந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுச்சேரி,

புதுவை அடுத்த அரியாங்குப்பம் அருகே சோலை கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (64 வயது). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்ட்ரோலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் வீடான அரியாங்குப்பம் அடுத்த மாஞ்சாலை பகுதிக்கு பைக்கில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, ஆர்.கே.நகர் தபால்காரர் வீதியில் அனுமதியின்றி விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டிருந்த 'ஜனநாயகன்' பட டிஜிட்டல் பேனர் காற்றின் வேகத்தால் சாலையில் சரிந்து விழுந்தது. அந்த வேளையில் சாலையில் பைக்கில் சென்ற தனசேகரன் மீது பேனர் விழுந்ததில் அவர் நிலைதடுமாறி அருகிலுள்ள கழிவுநீர் வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து தனசேகரனின் மகன் ராஜராஜன் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பேனர் தடைச் சட்டத்தை மீறுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் டிஜிட்டல் பேனர் வைத்த அருந்ததிபுரத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற தலைவர் கில்லி செல்வா என்கிற செல்வகணபதி (26 வயது), சண்முகம் நகரை சேர்ந்த கார்த்திக் (24 வயது), அருண்ராஜ் (19 வயது) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரும் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com