இங்கிலாந்து பிரதமருடன் மும்பையில் பிரதமர் மோடி சந்திப்பு; வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசனை

மும்பையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் பல்வேறு திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.;

Update:2025-10-07 15:19 IST

புதுடெல்லி,

பிரதமர் மோடி மராட்டியத்தின் மும்பை நகருக்கு நாளை முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. ஸ்டார்மரும் நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் பிரதமரான பின்னர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.

அப்போது, இரு நாடுகளின் தலைவர்களும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வர்த்தகம் மற்றும் தொழில்துறை தலைவர்களை சந்தித்து பேசுகின்றனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான வருங்கால பொருளாதார நட்புறவுக்கான மைய தூணாக இருக்க கூடிய விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் வழங்க கூடிய வாய்ப்புகளை பற்றி இதில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தலைவர்களும் மண்டல மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் பற்றிய தங்களுடைய பார்வைகளை பகிர்ந்து கொள்வார்கள். தொழில் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இதேபோன்று, ஜியோ உலக மையத்தில் நடைபெற உள்ள 2025-ம் ஆண்டுக்கான 6-வது குளோபல் பின்டெக் திருவிழாவில் இருவரும் பங்கேற்று நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றுவார்கள்.

இதில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மற்றும் சர்வதேச அளவில் 7,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 800 பேச்சாளர்கள், 400 காட்சிப்படுத்துவோர் மற்றும் 70 ஒழுங்குமுறையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தில், புதிதாக கட்டப்பட்டு உள்ள மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் பல்வேறு திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்