பஞ்சாப், இமாச்சல பிரதேசத்திற்கு நாளை பிரதமர் மோடி பயணம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குருதாஸ்பூரில் மீட்பு, நிவாரண உதவிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.;
புதுடெல்லி,
வட இந்தியாவில் கடந்த பல வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், டெல்லி என கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத கொட்டி வரும் கனமழையால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள அரசு நிர்வாகம் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இறங்கி உள்ளது. மாநில அரசுக்கு உதவியாக, ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்களை காக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஏற்கனவே பஞ்சாப் முதல்-மந்திரியிடம் பிரதமர் மோடி உறுதி கூறியிருந்தார். இந்நிலையில், மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள பஞ்சாப், இமாச்சல பிரதேசத்திற்கு நாளை பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது தொடர்பான பயண விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தரப்பில் கூறியிருப்பதாவது:-
இமாசலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் இருந்தவாறு பார்வையிடுகிறார். இதனைத் தொடர்ந்து ஹிமாசலின் காங்ரா பகுதியில், வெள்ள பாதிப்புகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரையும் காங்ரா பகுதியில் சந்தித்துப் பேசவுள்ளார். பின்னர், இமாசல பிரதேசத்தை முடித்துக்கொண்டு பிற்பகலில் பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டம் ஆகும்.