பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 5-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.;
கோப்புப்படம்
பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக கடந்த 5-ந்தேதி மொஹாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
பகவந்த் மான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் முன்னதாக நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் தேதி கூறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பகவந்த் மான் மருத்துவமனையில் இருந்தே வீடியோ கான்பரன்சிங் மூலம் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
அவரது உடல்நலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்து வருவதாகவும் மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது, அவர் பொதுமக்களை நோக்கி கையசைத்தார்.
கடந்த மாதம் சென்னைக்கு வருகை தந்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பஞ்சாப் மாநிலத்திலும் இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.