அரியானா: கார், பைக் மீது மோதிய லாரி - 4 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சண்டிகர்,
அரியானாவின் கர்னல் மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு இன்று லாரி சென்றுகொண்டிருந்தது. கர்னல் மாவட்டத்தின் கவ்ரண்டா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் எதிரே வந்த கார், பைக், பஸ் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் கார், பைக்கில் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், லாரி டிரைவர் உள்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.