சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.;

Update:2025-10-07 01:41 IST

புதுடெல்லி,

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த மாதம் லடாக்கில் 2 நாட்கள் போராட்டம் நடந்தது. அதில் நடந்த வன்முறையில் 4 பேர் பலியானார்கள். 90 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து, போராட்டத்துக்கு காரணமாக செயல்பட்டதாக கூறி சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் அவருடைய மனைவி கீதாஞ்சலி ஜே.அங்மோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை தனக்கு அளிக்க வேண்டும் என்ற கீதாஞ்சலியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அவரது மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்