பீகாருக்கு இந்த ஆண்டு 4 தீபாவளிகள்: அமித்ஷா பேச்சு
பாஜக தொண்டர்களைப் பொறுத்தவரை, ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்கான தேர்தல் இது என்று கூறினார் அமித்ஷா.;
பாட்னா,
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், அராரியா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “ பீகார் சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே ராகுல் காந்தி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஒரே நோக்கம். லாலு தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தேர்தலை முக்கியமானதாகக் கருதுகிறார். ஆனால், பாஜகவினருக்கு அப்படியல்ல.
பாஜக தொண்டர்களைப் பொறுத்தவரை, ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்கான தேர்தல் இது. மூன்றில் இரண்டு பங்கு வெற்றியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள். பிஹார் எனும் புனித பூமியில் இருந்து இந்த ஊடுருவல்காரர்களை விரட்டும் பணியை பாஜக செய்யும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இந்த ஆண்டு பீகார் மக்கள் 4 தீபாவளிகளை கொண்டாட வேண்டியிருக்கும். முதலில் அயோத்தி ராமர் திரும்பி வந்ததற்காகவும், இரண்டாவதாக முதல்வரின் மஹிளா ரோஜ்ஹர் யோஜனா திட்டத்தை செயல்படுத்தியதற்காகவும், மூன்றாவதாக ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்காகவும், நான்காவதாக வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சி அமைக்க இருப்பதற்காகவும் என மொத்தம் 4 தீபாவளிகளை கொண்டாட வேண்டியிருக்கும்” என்றார்.