வெனிசுலா அதிபர் கைது - இந்தியா கவலை

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.;

Update:2026-01-04 13:35 IST

புதுடெல்லி,

வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்திருந்தார். மேலும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வெனிசுலாவில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் கவலையளிப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெனிசுலாவில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. அங்குள்ள சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

வெனிசுலா மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து, பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்சினைகளை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். கராகஸில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு சாத்தியமான வகைகளில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்