பீகார் தேர்தல் முடிவுகள்: 100-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றிகள்
பீகார் சட்டசபை தேர்தலில் மேலும் சில தொகுதிகளில் 250-க்கும் குறைவான வாக்குகளால் வெற்றி தீர்மானிக்கப்பட்டு உள்ளது.;
கோப்புப்படம்
பாட்னா,
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டசபை தேர்தல் முடிந்து வாக்கு விவரங்களும் வெளியாகி இருந்தன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களிலும், தனியாக களம் கண்ட ஓவைசி கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
வாக்கு சதவீதத்தை எடுத்துக்கொண்டால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 20.08 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலைவிட 0.5 சதவீதம் அதிகம் ஆகும். அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 19.25 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் உயர்வாகும்.
இந்நிலையில் பீகார் தேர்தல் முடிவுகளில் 100-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் சில இடங்களில் வெற்றிகள் கிடைத்துள்ளன. இதன்படி 3 தொகுதிகளில், 100-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல மேலும் சில தொகுதிகளில் 250-க்கும் குறைவான வாக்குகளால் வெற்றி தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ராதா சரண் ஷா தனது போட்டியாளரான ராஷ்டிரீய ஜனதா தளத்தின் திபு சிங்கை விட வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.
கம்யூனிஸ்டு லிபரேஷன் கட்சியின் சிவபிரகாஷ் ரஞ்சன், அர்ராவில் உள்ள அகியான் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் பாஸ்வானிடம் 95 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சதீஷ் குமார் சிங் 30 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு பா.ஜனதாவின் அசோக் குமார் சிங் தோல்வி அடைந்தார். நபிநகர் சட்டமன்றத் தொகுதியில், ஐக்கிய ஜனதா தளத்தின் சேத்தன் ஆனந்த் தனது போட்டியாளரான அமோத் குமார் சிங்கை 112 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
டாக்கா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தின் பைசல் ரஹ்மான் வெற்றி பெற்றார், பா.ஜனதாவின் பவன் குமார் ஜெய்ஸ்வாலை வெறும் 178 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
போர்ப்ஸ்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜனதாவின் வித்யா சாகர் கேஷரி காங்கிரஸ் வேட்பாளர் மனோஜ் பிஷ்வாசிடம் 221 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.