கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? தவெக ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி பெண் எஸ்.பி.

கியூ ஆர் கோடு இல்லாத தொண்டர்களையும் உள்ளே செல்ல புஸ்சி ஆனந்த் அனுமதி அளித்தார்.;

Update:2025-12-09 13:41 IST

சென்னை,

தவெக தலைவர் விஜயின் கரூர் பொதுக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் முடிந்து 72 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், , புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் விரிவான சாலை வசதிகள் இல்லாததாலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அம்மாநிலத்தின் முதலமைச்சரை சந்தித்துப் பேசியும் அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த வகையில், புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக் கூட்டம் இன்று நடக்கிறது. காலை 10.30 மணிக்கு ஹெலிபேடு மைதானத்திற்கு வரும் விஜய் பிரசார வேனில் நின்றபடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். விஜயைப் பார்ப்பதற்காக ஏராளமான இளைஞர்கள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் நடக்கும் கூட்டம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், காலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் போலீஸார் அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கியூஆர் கோடு இல்லாமலேயே சில தொண்டர்களை உள்ளே செல்ல அனுமதித்தார். அங்கிருந்த அனைவரையும் உள்ளே விடுமாறு மற்றொரு தவெக நிர்வாகியும் கூறினார். இதனைப்பார்த்து கோபம் அடைந்த பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங், புஸ்சி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகளை எச்சரித்தார். கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு. தான் என்ன வேலை செய்ய வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் கூறக் கூடாது என்று கூறி, பாஸ் இல்லாதவர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்