பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்': தேமுதிக யாருடன் கூட்டணி? - பரபரப்பு தகவல்கள்
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 60 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி கண்டது.;
சென்னை,
தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் இருந்தபோதே தேமுதிகவை 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி நடிகர் விஜயகாந்த் தொடங்கினார். கட்சி தொடங்கிய 6 மாதத்திலேயே, அதாவது 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து களம் கண்டது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும், கணிசமான வாக்குகளை (8.4 சதவீதம்) தேமுதிக பெற்று அனைவரையும் புருவம் உயர்த்தி பார்க்கவைத்தது.
எதிர்க்கட்சி தலைவரானார், விஜயகாந்த்
தொடர்ந்து, 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி கிடைக்காவிட்டாலும் வாக்கு சதவீதம் (10.3 சதவீதம்) மேலும் உயர்ந்தது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முதன் முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு, 29 இடங்களில் வெற்றிபெற்று சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்றார். ஆனால், தேமுதிகவின் வாக்கு சதவீதம் 7.9 ஆக குறைந்தது.
2016 சட்டசபை தேர்தல்
2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதமும் 5.1 ஆக சரிந்தது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கு தேமுதிக தலைமை வகித்தது. முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டபோதும் ஒன்றில்கூட வெற்றிபெற முடியவில்லை. வாக்கு சதவீதமும் 2.4 என்ற அளவுக்கு குறைந்தது.
2021 சட்டசபை தேர்தல்
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 60 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி கண்டது. வாக்கு சதவீதம் 0.43 என்ற அளவுக்கு கடுமையாக சரிந்தது. 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி கண்டது. வாக்கு சதவீதம் 2.59 என்ற நிலையில் இருந்தது.
கூட்டணி முடிவில் எச்சரிக்கை
தற்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அக்கட்சி சந்திக்க இருக்கும் முதல் சட்டசபை தேர்தல். தளர்ச்சியில் இருக்கும் தேமுதிகவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு இருக்கிறது. குறிப்பாக, தேர்தல் சமயத்தில் கூட்டணி முடிவை சரியாக எடுக்க வேண்டும் என்பதில் அவர் எச்சரிக்கையாக இருந்து வருகிறார். இந்த நிலையில், கடலூரில் நேற்று தேமுதிக மாநாடு நடைபெற்றது. ஏற்கனவே, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்ததால், முடிவு என்ன? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
பிரேமலதா வைத்த சஸ்பென்ஸ்
ஆனால், மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தேமுதிக யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த நிமிடம் வரை யாரும் கூட்டணியை அறிவிக்கவில்லை. நாம் ஏன் முந்திரிக் கொட்டைப் போல் அவசரப்பட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று 'சஸ்பென்ஸ்' வைத்து பேசினார்.பிரேமலதா விஜயகாந்தின் இந்த அறிவிப்பால், தேமுதிக தொண்டர்களிடம் மட்டுமல்ல, தமிழக மக்கள் மத்தியிலும் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
யாருடன் கூட்டணி?
இதுகுறித்து தேமுதிக வட்டாரத்தில் விசாரித்தபோது, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. "2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் வழங்கப்பட்டன. எனவே, அதே தொகுதிகளை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதிமுக தரப்பிலோ, அன்று கட்சியில் இருந்தவர்கள் பலர் இன்றைக்கு இல்லை. வாக்கு சதவீதமும் பழைய நிலையில் இல்லை. எனவே, 8 முதல் 10 தொகுதிகள் வேண்டுமானால் தரலாம்" என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்தது.