அரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

ஆம்புலன்ஸ் வசதி கேட்டு அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-20 17:51 GMT

வில்லியனூர்

ஆம்புலன்ஸ் வசதி கேட்டு அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆம்புலன்ஸ் வசதி

வில்லியனூர் அருகே அரியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் அரியூர், பங்கூர், ஆனந்தபுரம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைபெற்று செல்கின்றனர். சாலை விபத்து, பாம்பு கடி, விஷப்பூச்சி கடி, தீக்காயம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் மேல் சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த 108 ஆம்புலன்சை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சதீஷ்குமார், அருகில் உள்ள திருபுவனை மருத்துவமனைக்கு வழங்கியதாக தெரிகிறது. இதனால் அரியூரில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. இதனால்ஏற்படும் காலதாமதத்தால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் அரியூர், பங்கூர், ஆனந்தபுரம் கிராமங்களை சேர்ந்தவர்கள் இன்று காலை அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீரென்று முற்றுகையிட்டனர். அவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும், மருந்து மாத்திரைகள் தட்டுபாட்டின்றி வழங்க வேண்டும், சரியான முறையில் சிகிச்சை அளிக்காத டாக்டர், செவிலியர்களை இடமாற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், சரியான நேரத்திற்கு டாக்டர்கள் பணிக்கு வருவதில்லை, தனியார் மருத்துவக்கல்லூரி பயிற்சி மாணவர்களை கொண்டு மருத்துவம் பார்ப்பதை கண்டித்தும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பரபரப்பு

இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்