கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
போலீசில் புகார் செய்ததால் கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தடுக்க முயன்ற அவரது தந்தையும் தாக்கப்பட்டார்.;
அரியாங்குப்பம்
போலீசில் புகார் செய்ததால் கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தடுக்க முயன்ற அவரது தந்தையும் தாக்கப்பட்டார்.
மது குடிக்க பணம்...
தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்பன் (வயது 46). இவரது மூத்த மகன் பிரவீன்குமார் (22). கட்டிட தொழிலாளி. இவரும், பூரணாங்குப்பம் திடீர் நகரை சேர்ந்த அரவிந்த், ராகுல்காந்தி, ரோஜா நகரை சேர்ந்த விஸ்வா ஆகியோரும் நண்பர்கள் ஆவர்.
சம்பவத்தன்று பிரவீன் குமார், கிருமாம்பாக்கத்தில் கட்டிட வேலை முடித்து கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பூரணாங்குப்பம்-கடலூர் ரோடு சந்திப்பில் வந்த போது அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் விஸ்வா ஆகிய 3 பேரும் பிரவீன்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து பிரவீன்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
அரிவாள் வெட்டு
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் பிரவீன்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த அரவிந்த், ராகுல்காந்தி மற்றும் விஸ்வா ஆகிய 3 பேரும் பிரவீன்குமாரின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர்.
பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரவீன் குமாரை வெட்டினர். இதை தடுக்க முயன்ற அவரது தந்தை குப்பனும் தாக்கப்பட்டார். அத்துடன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள், மினிவேன் ஆகியவற்றையும் சேதப் படுத்தி விட்டு தப்பி சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த பிரவீன்குமார், குப்பன் ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குப்பன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த், ராகுல்காந்தி, விஸ்வா ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.