தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது: 18 சவரன் பறிமுதல்

தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர், பெண்களிடம் பறித்த நகைகளை விற்று, அந்த பணத்தில் 2 பேரும் கேரளாவில் ஜாலியாக செலவு செய்து வந்துள்ளனர்.;

Update:2025-12-03 21:54 IST

தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி அமுதா (வயது 41). இவர் கடந்த 27-ம் தேதி இரவில் அங்குள்ள ஒரு கடையில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 3½ சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டார்.

மேலும் அன்றைய தினம், தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு டெலிபோன் காலனியைச் சேர்ந்த செல்வம் மனைவி கிறிஸ்டி(30), தனது மகனை டியூஷனில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றபோது அவர் அணிந்திருந்த கவரிங் செயினையும் பறித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பான புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெண்களிடம் நகை பறித்தது பண்டாரம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் பாரத்(22) எனத் தெரியவந்தது. மேலும் அவர் கடந்த அக்டோபர் மாதம் மாதவன் நகரைச் சேர்ந்த பேச்சிராஜா மனைவி சுப்புலட்சுமி(43) என்ற பெண்ணிடம் 15 சவரன் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் அளித்த தகவலின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் அஜித் குமார்(28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் பாரத் பெண்களிடம் நகைகளை பறித்து அஜித்குமாரிடம் கொடுத்துள்ளார். அவர் அந்த நகைகளை விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தில் இருவரும் கேரளாவில் ஜாலியாக செலவு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் கேரளா சென்று அவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 18½  சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்