முறுக்கு கம்பெனி வேலைக்காக சிறுவனை கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
தேனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன், 11 வயது சிறுவன் தேனியில் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.;
தேனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன், 11 வயது சிறுவன். அந்த சிறுவன் தேனியில் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம்தேதி பள்ளிக்கு சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. அவருடைய தந்தை கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். பள்ளி அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுவனை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அழைத்துச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால், சிறுவனை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில், சிறுவனை சின்னமனூர் சாமிகுளத்தை சேர்ந்த முருகன் (வயது 57) என்பவர் கடத்திச்சென்றது தெரியவந்தது. பின்னர் அவர், சிறுவனை உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி(57) என்பவர் மூலம் பெங்களூருவில் உள்ள ஒரு முறுக்கு கம்பெனியில் குழந்தை தொழிலாளராக வேலைக்கு சேர்த்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருவுக்கு விரைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அங்கு ஒரு முறுக்கு கம்பெனியில் இருந்த சிறுவனை 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மீட்டனர். மேலும் இதுதொடர்பாக முருகன், பாண்டி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில், முருகன், பாண்டி ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அனுராதா நேற்று தீர்ப்பளித்தார். இதனையடுத்து அவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.