தூத்துக்குடியில் 2025-ம் ஆண்டில் போக்சோவில் 255 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு 31 கொலை வழக்குகளில் 69 குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு பொதுவாக பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதுமின்றி அமைதியாக இருக்க காவல்துறை பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுத்துள்ளது. கொலை மற்றும் காய வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையின் துரித நடவடிக்கையினால் மாவட்டத்தில் பெரிய அளவில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லை.
சிறு சிறு பிரச்சினைகளிலும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த காரணத்தால் அது மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு பரவாமலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலும் இருந்தது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அதிகமான விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், காவல் நிலையத்தில் பெறப்படும் அனைத்து குற்ற சம்பவங்கள் தொடர்பான மனுக்கள் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தினாலும் 2025-ம் வருடம் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு 31 கொலை வழக்குகளில் 69 குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. அதில் 9 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயள் தண்டனையும், 60 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் வழங்கப்பட்டது. மேலும் 5 கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 8 குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. அதே போல் 16 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 19 குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. காவல்துறையினர் எடுத்த கடுமையான நடவடிக்கைளின் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு சாதி ரீதியான படுகொலைகள் ஏதும் நடைபெறவில்லை.
சொத்து வழக்குகள்:
2025-ம் ஆண்டில் பதிவான சொத்து வழக்குகளில் 77 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 611 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சுமார் ரூ.3 கோடியே 47 லட்சத்து 69 ஆயிரத்து 141 மதிப்பிலான களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
போக்சோ வழக்குகள்:
2025-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 255 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டில் 29 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 36 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 10 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 5 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
கஞ்சா போன்ற போதைபொருள் வழக்குகள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைபொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. 2025-ம் ஆண்டில் 460 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 201.411 கிலோ கஞ்சாவும், 820 போதை ஊசிகள், 190 போதை மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளின் 71 வாகனங்களை கைப்பற்றியும், அவர்களின் 52 வங்கி கணக்குகளை முடக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 29 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கைப்பற்றப்பட்ட 120.919 கிலோ கஞ்சா போதை பொருள் அழிக்கப்பட்டது. அதே போல் குட்கா வழக்குகளில் 570 நபர்கள் கைது செய்யப்பட்டு, 4870.650 கிலோ எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 43 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மணல் திருட்டு வழக்கு:
மாவட்டம் முழுவதும் மணல் திருட்டில் ஈடுபட்ட 156 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மணல் திருட்டிற்கு உபயோகப்படுத்திய 88 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குண்டர் தடுப்பு காவல் சட்டம்:
2025-ம் ஆண்டு மொத்தம் 138 சமூக விரோதிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 92 நபர்கள் போக்கிரிகள் ஆவார்கள். 29 நபர்கள் கஞ்சா வழக்கிலும், ஒரு நபர் திருட்டு வழக்கிலும், 14 நபர் பாலியல் குற்றத்திலும், 2 நபர்கள் மணல் திருட்டிலும் ஈடுபட்டவர்கள் ஆவார்கள்.
பிடிவாரண்ட்:
இந்த ஆண்டில் மட்டும் 218 பிடியாணைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கன்ன களவு வழக்கில் 2019-ம் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கண்டுபிடித்து, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக வலைதளப் பிரிவு:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்புவோர், பிற இனத்தவரை இழிவுபடுத்தும் விதமாகவும், சாதிய வன்மத்தை தூண்டும் விதமாகவும் பதிவிட்ட 32 வழக்குகளில் 43 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
CCTV:
கடந்த 2025-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், புதிதாக 1682 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும், பெருமளவு குற்றங்கள் குறைவதற்கும், நடந்த குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்கும் ஏதுவாக உள்ளது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை மேற்கொண்ட பல்வேறு முன் தடுப்பு நடவடிக்கைகள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்படாடமல் இருக்கவும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பள்ளிக்கல்விதுறை, வருவாய்துறை இணைந்து பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜாதி ரீதியான பதற்றமான கிராமங்களுக்கு 16,920 நடை ரோந்து (Foot patrol) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்கிரிகளின் நடமாட்டத்தை கட்டுபடுத்த 1750 போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 390 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன் தடுப்பு நடவடிக்கையாக 865 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 589 நபர்களுக்கு நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. மேலும் கெட்ட நடத்தைக்காரர்கள் 16742 முறை தணிக்கை செய்யப்பட்டுள்ளனர்.
2025-ம் ஆண்டில் பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய 688 நபர்கள் மீது பிணையம் பெறும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளிலும் 108 ஜாதி ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், 1663 போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. 2368 போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டில் கொடுங்குற்றங்களில் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு ரூ.19 லட்சத்து 12 ஆயிரம் தீருதவித் தொகை வழங்குவதற்காக கருத்துருக்கள் மாவட்ட சட்ட பணிக்குழுவிற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு நடைபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாவிஷேகம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கந்தசஷ்டி திருவிழா ஆகிய திருவிழாக்களில் காவல்துறையினரின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாட்டின்படி எந்தவித அசம்பாவிதமுதம் இல்லாமல் சீரும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதே போன்று கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற கேரல் அலங்கார வாகன ஊர்வலத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.