தூத்துக்குடியில் தொழிலதிபரை காரில் கடத்தி மிரட்டிய 3 பேர் கைது
தூத்துக்குடியில் தனசேகரன்நகர் பூங்காவில் நடைபயிற்சி சென்ற ஒரு தொழிலதிபரை சிலர் தாக்கி, காரில் கடத்திச் சென்று பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.;
தூத்துக்குடி சிதம்பரநகரை சேர்ந்த உலகநாதன் (வயது 54), ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் ஆவார். இவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக, கோமதிபாய் காலனியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி சரவணன்(44) என்பவரிடம் ரூ.20 லட்சம் வாங்கியுள்ளார். அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்ற நிலையில், ரூ.6 லட்சத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகைக்கு கொடுத்த செக், வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப பெறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, தனசேகரன்நகர் பூங்காவில் நடைபயிற்சி சென்ற உலகநாதனை சிலர் தாக்கி, காரில் கடத்திச் சென்று பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து சிப்காட் போலீசார் உலகநாதனை மீட்டு, சரவணன், அவரது தம்பி பாலமுருகன், தி.மு.க. நிர்வாகியான அண்ணாநகரை சேர்ந்த ஜெயராஜ்(38) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.