உடன்குடியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

உடன்குடி கீழபுதுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.;

Update:2025-10-16 07:08 IST

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி கீழபுதுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகேஷ் அரவிந்த தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் சிறுவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்றுக் கொண்டிருந்தனர்.

உடனடியாக போலீசார் அந்த 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், உடன்குடி புதுமனை கோட்டவிளையை சேர்ந்த செல்வமுத்து மகன் முத்துராஜ் (வயது 31), காயல்பட்டினம் மேல நெசவுத் தெருவைச் சேர்ந்த காதர்முகைதீன் மகன் ஜெயினூல்தீன்(33), கீழநாலுமூலைக்கிணறு புதுகாலனியை சேர்ந்த மணி மகன் நவீன்குமார்(24) ஆகியோர் என தெரியவந்தது.

இவர்களிடம் கஞ்சா வாங்கிய சிறுவர்களிடம் இருந்த பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த சிறுவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்