பள்ளி வாகனம்-மினி பஸ் மோதி விபத்து 4 குழந்தைகள் காயம்
கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நேற்று மாலை முடிந்த பின்னர், பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி நேற்று மாலை முடிந்தது. பின்னர் பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் பல்க் அருகேயுள்ள மாணவர்களை இறங்கி விட்டு, பெட்ரோல் பல்க் வழியாக அந்த பள்ளி வாகனம் மெயின் சாலைக்கு வந்த போது, கூசாலிபட்டியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்ற ஒரு தனியார் மினி பஸ் பள்ளி வாகனம் மீது மோதியது.
இதில் பள்ளி வாகனத்தின் கண்ணாடி உடைந்து வாகனத்தில் இருந்த 4 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகள் வீடு திரும்பினர். விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.