சென்னை மெட்ரோவில் 10 ஆண்டுகளில் 46.73 கோடி பேர் பயணம்
கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் பயணித்தவர்களின் எண்ணிக்கை 11.19 கோடியை எட்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயிலில் ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2025 வரை 46.73 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் 11.19 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதிலிருந்து பொது மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட பத்து ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2025-ம் ஆண்டில் மட்டும் 11.19 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளார்கள்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2018 வரை 2,80,52,357 பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், 2019-ம் ஆண்டில் 3,28,13,628 பயணிகளும், 2020–ம் ஆண்டில் 1,18,56,982 பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,87,765 பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9,11,02,957 பயணிகளும், 2024-ம் ஆண்டில் 10,52,43,721 பயணிகளும், இந்நிலையில், கடந்த 2025-ம் ஆண்டில் 11,19,80,687 பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளார்கள்.
ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2025 வரை மொத்தம் 46,73,41,480 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. அனைத்து பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் ஆங்கில புத்தாண்டு 2026 நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.