தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடி மதிப்பீட்டில் 4வது ரெயில்பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் 4வது தண்டவாளம் அமைக்க ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4-வது ரெயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் ரு.757.18 கோடியில் அமைய உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 30.2 கிலோ மீட்டர் தூரத்திலான 4-வது ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டத்தின் செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு பிரதான பாதை ஆகும். மின்சார ரெயில்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
அதிகளான பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில், தற்போது இந்த வழித்தடத்தில் பயணிகளின் பயன்பாடு 87 சதவீதமாக இருக்கிறது. புதிய பாதை செயல்படுத்தப்படும் போது அது 136 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, பயணிகளின் கூட்ட நெரிசலும் குறையும். செங்கல்பட்டு வரையில் மின்சார ரெயில் சேவையை நீட்டிக்கவும் இது உதவும். தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்பதூர் ஆகிய பகுதிகளில் அதிகரிக்கும் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமையும். மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் பயணளிக்கும். இதேபோல, இந்த வழித்தடத்தில் ஆண்டுக்கு ரூ.157 கோடி அளவில் வருவாய் ஈட்டும் வகையில் சரக்கு ரெயில் போக்குவரத்தும் கையாளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.