கீழடி அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கோவில் சிலைகள் கண்டெடுப்பு

கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சிதைந்த பாண்டியர் கால கல்வெட்டும், சிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.;

Update:2025-11-27 18:18 IST

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே அம்பலத்தாடி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த பெருமாள் கோவில் கல்வெட்டு சிலைகளுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக சமயங்கள், தத்துவம் மற்றும் மனிதநேய சிந்தனைப்புல முதுகலை மாணவர் வினோத், கிராமத்தில் ஆய்வு செய்தபோது இவற்றை கண்டறிந்தார். இதுகுறித்து மாணவர் கூறியதாவது:-

இந்து மதப் பிரிவுகளில் ஒன்றாக வைணவம் இடம் பெறுகிறது. தமிழகத்தில் வைணவ கோவில்கள் அதிக அளவில் உள்ளன. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பலத்தாடி கிராமத்தில், கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சிதைந்த பாண்டியர் கால கல்வெட்டும், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் போன்ற 10 வகையான சிலைகளும் சிதைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வூர் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில், சதுர்வேதி மங்கலமான பிராமண குடியிருப்பாக இருந்து வந்துள்ளது. இவர்கள் இப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலை வழிபட்டு வந்திருக்கின்றனர்.

அவர்கள் காலப்போக்கில் இடம்பெயர்ந்து சென்றதால் கோவில் வழிபாடின்றி காணப்பட்டுள்ளது. கோவில் மூலவரான பெருமாள் சிலை, சிதைந்த நிலையில் 72 செ.மீ. உயரத்துடனும் 38 செ.மீ. அகலத்துடனும் உள்ளது. தலைப்பகுதிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சிலையில் பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் உள்ளது. வலது முன்கை அபய முத்திரையுடனும், இடதுமுன் கை கட்டிய வலம்பித முத்திரையுடனும் காணப்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் முற்றிலும் உடைந்து காணப்படுகின்றன. கழுத்தணிகள், கையணிகள், தோளணிகளுடன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடத்துடன் கூடிய கருடாழ்வார் சிலை, தொடைக்கு கீழ்ப்பகுதி முற்றிலும் சிதைந்த நிலையில் கிடக்கிறது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:- கோவிலின் சிதைந்த பாகங்கள் கிராமத்தில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. கி.பி.12-ம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் கூடிய 2 வரி துண்டு கல்வெட்டு, உடைந்த நிலையில் காணப்படுகிறது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் 2 பெருமாள் சிலைகள், 2 ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கிடைப்பதாலும் அவை வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்தவையாக இருப்பதாலும் முன்பு இங்கிருந்த பெருமாள் கோவில் அழிவுற்றதால் அது புதுப்பிக்கப்பட்டதும், மீண்டும் சிதலமடைந்ததையும் அறிய முடிகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்