திருச்சியில் 2 மாடி வீடு மண்ணில் புதைந்ததால் பரபரப்பு

மண்ணில் புதைந்த வீட்டை கண்டு குடியிருப்புவாசிள் அதிர்ச்சி அடைந்தனர்.;

Update:2025-10-26 00:23 IST

திருச்சி,

திருச்சி இ.பி. ரோடு அருகே உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 50). தனியார் ஊழியரான இவர் நரசிம்மன் என்பவருடைய 2 மாடி கொண்ட வீட்டை கடந்த ஆகஸ்டு மாதம் விலைக்கு வாங்கி உள்ளார்.

பழமையான இந்த வீட்டை முருகானந்தம் சீரமைக்க எண்ணினார். இதற்காக கட்டிட தொழிலாளர்களை வைத்து கடந்த 3 நாட்களாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். முதல்கட்டமாக கீழ் தளத்தில் தரையை இடித்து புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

நேற்று காலையில் கீழ் தளத்தில் 2 தொழிலாளர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின் மதியம் 2 மணி அளவில் அவர்கள் சாப்பிட சென்றுவிட்டனர். அப்போது வீட்டின் கீழ் தளம் முழுவதும் பலத்த சத்தத்துடன் மண்ணில் புதைந்தது. மேல்தளத்தில் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தது.

இதற்கிடையில் இந்த சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டுக்கரர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது, முருகானந்தத்தின் வீடு மண்ணில் புதைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். போலீசார் விபரீதத்தை எடுத்துக்கூறி அவர்களை கலைந்து போக செய்தனர். மேலும் அங்கு பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்பு கம்பி அமைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மின்வாரிய துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து அருகில் உள்ள வீட்டிற்கு மாற்று இணைப்பு வழங்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த பாரதியார் தெரு வீடுகள் நிறைந்த பகுதியாகும். மேலும் அந்த வீடு இடிந்து விழுந்தால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி வீடு மண்ணில் புதைந்தபோது, அங்கு யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டை முழுவதும் இடிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்