பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-11-30 16:29 IST

கோப்புப்படம் 

கடந்த ஆண்டு நடந்த கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ராஜ்பவன் என்ற பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கையாக முன்வைத்து பேசினார். இந்த நிலையில் ராஜ் பவன் இனி லோக் பவன் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, கவர்னர் மாளிகை இனி மக்கள் மாளிகை என்று அழைக்கப்படும். இது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை! சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை! சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்