சேலத்தில் நண்பருடன் இரவில் தங்கி இருந்த பெண் என்ஜினீயர் திடீர் உயிரிழப்பு..விசாரணையில் திடுக்கிடும் தகவல்

இரவு நைட்ஷோவை முடித்து விட்டு 2 பேரும் நள்ளிரவு நேரத்தில் போதையில் டியூசன் சென்டருக்கு வந்து தனிமையில் இருந்துள்ளனர்.;

Update:2025-12-09 19:16 IST

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி சுப்பிரமணியபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்த டெல்லி ஆறுமுகத்தின் 2-வது மகள் பாரதி (வயது38). சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்து விட்டதால், பாரதி தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. பாரதி தனது வீட்டில் டியூசன் எடுத்து வந்தார்.

அவருக்கும், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் உதயசரண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் (நைட் ஷோ) இரவு நேர சினிமாவுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் டியூசன் சென்டருக்கு வந்து இரவில் ஒன்றாக தங்கியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் பாரதி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உதயசரண், தான் பணிபுரியும் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த பாரதியின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

அப்போது அவர்கள் பாரதியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை உதயசரண் அடித்து கொலை செய்திருக்கலாம் எனக்கூறி அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தனியார் மருத்துவமனையில் இருந்த பாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் குழுவினர் பாரதியின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இறுதி சடங்கு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், பாரதியின் மூக்கு மற்றும் நெஞ்சு பகுதியில் லேசான ரத்த காயங்கள் இருந்ததும், மேலும் அவர் மூச்சுத்திணறடிக்கப்பட்டு இறந்திருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து உதயசரணை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். அதில்,

உதயசரணுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் நாசிக்கல்பட்டியில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் திருமாணமாகாமல் தனியாக இருந்த பாரதியை ஆசை வார்த்தை கூறி சந்தித்து முதலில் நட்புடன்பழகி பின்னர் காதலாக மாறியது. பின்னர் அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அவ்வபோது அடிக்கடி வெளியூர்களுக்கும், கணவன் - மனைவிபோல சுற்றி வந்தனர். இதற்கிடையே உதயசரணிடம் பாரதி உனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வா.என்னை திருமணம் செய்து கொள் என்று அடிக்கடி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உதயசரண் செய்வதறியாது திகைத்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு நைட்ஷோவை முடித்து விட்டு 2 பேரும் நள்ளிரவு நேரத்தில் போதையில் வீட்டிற்கு வந்தனர். பின்னர் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாரதி வற்புறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த உதயசரண், பாரதியை சர்மாரியாக தாக்கி கிழே தள்ளினார். மேலும் தலையணை வைத்து அமுக்கி மூச்சியை திணறடித்தார். இதில் மூச்சு திணறிய பாரதி துடி துடித்து இறந்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து உதயசரணை கைது செய்த போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்