கோவை அவினாசியில் ரூ.2½ கோடி செலவில் அமைகிறது மின்விசை படிக்கட்டுடன் நடைமேம்பாலம்
பொதுமக்களும் எளிதில் சாலையை கடந்து செல்ல வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;
கோவை,
கோவை அவினாசி ரோட்டில் ரூ.1,791 கோடியில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் அவினாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது. மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு பல இடங்களில் சிக்னல்கள் இருந்தன. இதனால் சாலையை எளிதில் கடந்து வந்தனர். தற்போது நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலையை கடந்து செல்வதில் பல்வேறு இடங்களில் சிரமம் உள்ளது. யூ-டேர்ன் அமைக்கப்பட்டாலும், நடந்து செல்பவர்கள் கடக்க முடியவில்லை.
இந்தநிலையில் லட்சுமி மில் சந்திப்பு, கூர்நோக்கு இல்லம் அருகே நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.2½ கோடி செலவில் தனியார் மருத்துவமனை பங்களிப்புடன் இந்த நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மின்விசை படிக்கட்டுடன், இந்த நடைமேம்பாலம் இருபுறமும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. நெடுஞ்சாலைத்துறை இதற்கான திட்டவரைவை தயாரித்து, அரசின் ஒப்புதல் பெற்று பணிகளை செயல்படுத்தும். இந்த நடைமேம்பாலம் மூலம் விபத்துகள் நடைபெறுவது தடுக்கப்படுவதுடன், பொதுமக்களும் எளிதில் சாலையை கடந்து செல்ல வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது:-
லட்சுமி மில் சந்திப்பு தவிர அண்ணாசிலை, நவ இந்தியா, ஹோப் கல்லூரி, கே.எம்.சி.எச். ஆகிய 4 இடங்களிலும் மின்விசை படிக்கட்டுடன் நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் தொடங்கி மற்ற இடங்களில் பின்னர் பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.