சென்னை மணலி அருகே துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் பரபரப்பு
காலை 6 மணியளவில் துணை மின் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்தது.;
சென்னை,
சென்னை மணலி அருகே 400 KV, 230 KV, 110 KV என்ற அளவில் இயங்கி வரும் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மின் இணைப்புகள் செல்கின்றன. இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் துணை மின் நிலையத்திற்கு வெளியே உள்ள 2 டிரான்ஸ்பார்மர்களில் ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்தது.
அதனை தொடர்ந்து டிரான்ஸ்பார்மரில் இருந்து வெண்புகை வெளியேறியது. இது குறித்து தகவலறிந்து மணலி மற்றும் மாதவரம் தீயணைப்புத்துறையினர் சுமார் 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீப்பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர் மற்ற இணைப்புகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.