தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வெளியேறிய புதுப்பெண்... செல்போனால் வாழ்க்கையே வினையாக முடிந்தது
திருமணமான 10 மாதங்களில் தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு புதுப்பெண் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கனகதுரை(வயது 55). இவரது மகள் அன்பரசி(19). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை தொடங்கினர்.
ஆனால் அவர்களது மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. இதற்கு காரணம் செல்போன்தான். ஆம், அந்த செல்போனால்தான் அவர்களது வாழ்க்கையே வினையாக முடிந்துள்ளது. கடந்த சில நாட்களாக அன்பரசி, வேறொருவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது. இது பற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் கண்டித்துள்ளார். இருப்பினும் அன்பரசி தொடர்ந்து செல்போனில் பேசியதை நிறுத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்த அன்பரசி, அந்த நபருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வெளியே சென்றிருந்த அறிவழகன் வீட்டிற்கு வந்தார். மனைவி செல்போனில் பேசியதை கண்டதும் ஆத்திரமடைந்த அறிவழகன் அவரை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதனால் அன்பரசி, தனது கணவர் கட்டிய தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வெளியேறினார். அதன்பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அன்பரசி கிடைக்கவில்லை. இது குறித்து கனகதுரை கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வெளியேறிய அன்பரசி, கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை மீட்டு வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். வேறொருவருடன் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் திருமணமான 10 மாதங்களில் தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு புதுப்பெண் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.